மதுரையில் மெட்ரோ திட்டம் கொண்டு வர சாத்தியக்கூறு ஆய்வுகள் தனியார் நிறுவனம் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், செல்போன் மற்றும் கடனுதவி, நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறுகையில் “கலைஞர் நூலகம் 5 தளங்கள் கட்டப்பட்டு 6 ஆம் தளப்பபணிகள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 5,523 இ – பட்டா வழங்கப்பட்டது, 538 இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது, மக்களுக்கு தேவையான அனைத்து சான்றுகளும் வழங்கப்பட்டு உள்ளது, 3,16,563 பேருக்கு 15 நாட்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. 44,254 குடும்ப அட்டைகள் ஒராண்டில் வழங்கப்பட்டுள்ளது, 5 ஆண்டுக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும், நிலத்தடி நீரை சேமிக்க 1,800 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 2,630 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்று நோயை கண்டறிய 316 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி 13 லட்சத்து 20 ஆயிரம் பேரை பரிசோதனை செய்ததில் 2 லட்சம் பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 100 கோடியே 50 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது, மதுரை மாவட்டத்தில் 28 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதல் தவனை தடுப்பூசி 85.9 சதவீதம் பேர் செலுத்தி கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இரண்டாம் தவனை தடுப்பூசி 61.5 சதவீதம் பேர் செலுத்தி கொண்டுள்ளனர். 2,908 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். கோரிப்பாளையம் பாலத்திற்கு விரைவில் செண்டர் விடப்படும், அப்போலோ மருத்துவமனை சந்திப்பு மேம்பாலம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. பெரியார் – யானைக்கல் சந்திப்பு மேம்பாலம் கட்ட நில எடுப்பு பணிகள் நடைபெறுகிறது. மதுரையில் மெட்ரோ திட்டம் கொண்டு வர சாத்தியக்கூறு ஆய்வுகள் தனியார் நிறுவனம் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.

