ஜெய் பீம்’ திரைப்பட சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வந்தப்பாடு இல்லை. சூரியாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் என அறிவித்தநிலையில், சூர்யா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால், ஒரு லட்ச ரூபாய் சூர்யாவுக்கு உடனே மணியார்டர் அனுப்புகிறேன் என பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கே என் சேகர் தெரிவித்துள்ளார்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை இழிவாக சித்தரித்ததாகவும், வன்னியர்கள் வணங்கக் கூடிய அக்னி கலசத்தை காட்சியொன்றில் பயன்படுத்தியதாகவும் வெளியாகிவரும் சர்ச்சை குறித்து காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் அம்பத்தூர் – ஆவடி – மதுரவாயில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் 100 பேர் அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் இன்று குவிந்தனர்.
அங்கு காவல் இணை ஆணையர் இல்லாத காரணத்தினால், ஆவடியில் துணை ஆணையர் மகேஷ் ஐ.பி.எஸ் அவர்களிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்த சூர்யா, விஷுவல் எடிட்டர் கதிர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்கவும்” என குறிப்பிடப்பட்டிருந்தது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைப் பொதுச் செயலாளர் கே என் சேகர் , “சூர்யா படம் வெளியாகும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதி நிலவவும், கலவரத்தை தடுக்கவும் நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கும்பட்சத்தில் என்னுடைய சார்பாக ஒரு லட்ச ரூபாய் சூர்யாவுக்கு உடனே மணியார்டர் அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார்.