• Sun. May 5th, 2024

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம்… கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்..,

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக இன்று தை கார்த்திகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் திருமஞ்சனம் மஞ்சள் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதணைகள் நடைபெற்றது.

தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்ப திருவிழா நடைபெறும். விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள்வார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுத்து தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதே போல இரவு மின் ஒளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *