நற்றிணைப்பாடல் 368:
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும் அறியேன் வாழி – தோழி! – அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என் நிறை அடு காமம் நீந்துமாறே.
பாடியவர்: மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார். திணை:நெய்தல்
பொருள்:
தோழீ! வாழி; ஆதித்த மண்டிலம் தான்கொண்ட சினம் தணியப்பெற்று அத்தமனக் குன்றைச் சென்றுபுக; நிறைந்த சிறையையுடைய நாரையின் கூட்டம் ஆகாயத்திலே நெருங்கிச் செல்லாநிற்ப; பகற் பொழுதை மெல்ல மெல்லப் போக்கி முல்லையரும்பு வாய்திறந்து மலராநிற்கும் பெரிய புல்லிய மாலைப் பொழுதானது; நேற்று வந்து துன்புறுத்தியதுபோல இன்றும் வருவதாயினோ; பெரும்பாலும் ஞெமைகள் வளர்ந்த உயர்ந்த இமயமலை உச்சியின்கண்ணே; வானிடத்தினின்று இழிதரும் வயங்கிய வெளிய அருவியையுடைய பெரிய கங்கையாற்றினை; கரை கடந்து இழியாநின்ற அணையை உடைத்துச் செல்லுங் கடிய செலவினையுடைய நீர் வெள்ளம் போன்ற; எனது நிறையை அழித்துப் பெருகுகின்ற காம வெள்ளத்தை நீந்துமாறு நன்றாகத் தெரிந்தேனு மில்லையே! எவ்வாறு உய்குவேன்?