• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி!

ByKalamegam Viswanathan

Aug 25, 2026

​23.08.2010-க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவும் இடியாகவும் இருந்தது.

அதாவது, பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் பதவி உயர்வுக்கு மட்டும் அல்லாமல், ஆசிரியர் பதவியில் தொடரவும் தகுதித்தேர்வு கட்டாயம் எனத் தீர்ப்பு வழங்கியது.

இதன்படி, ஓய்வு பெற ஐந்து ஆண்டிற்கு மேல் உள்ளவர்கள் மூன்று ஆண்டிற்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைய வேண்டும் எனவும், தேர்ச்சி அடையாதவர்களுக்குக் கட்டாய ஓய்வு எனவும், ஓய்வு பெற ஐந்து ஆண்டிற்குள் இருந்தால் தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை எனவும், அதேநேரம் பதவி உயர்வு கோரினால் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை அடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசனைகள் கேட்கப்பட்டு, பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குச் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டு முறை சிறப்புத் தகுதித் தேர்வு என அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. ஆனாலும், தேர்வில் வேலைநாடுநர்களுக்குக் கேட்கப்படும் கேள்விகள் மிகக் கடினமாக இருந்தன.

இந்தச் சூழலில்தான், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ. ராஜ்மோகன் அவர்கள் மீண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளையும் வரவழைத்து ஆலோசனைகளைக் கேட்டறிந்து, குறிப்பெடுத்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார். அதன் விளைவாக, இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ. ராஜ்மோகன் அவர்கள் தனித் தீர்மானமாகக் கொண்டுவந்தார்.

அதன்படி, 23.08.2010-க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து முழுவதுமாக விலக்களிக்க வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். இந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பெரிதும் வரவேற்கிறது.

​இந்தத் தீர்மானத்தை ஏற்று, தேசியக் கல்விக் குழுமம் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அனுப்பி, ஒன்றிய அரசு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து, தமிழ்நாட்டில் உள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தையும், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 20 லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும் நிலைநிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

​இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், தீர்மானத்தை ஆதரித்த தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

​மேலும், தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதைப் போன்று, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தும் சிறப்புத் தகுதித் தேர்வில் 40 விழுக்காடு மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என நிர்ணயிக்க வேண்டும். மேலும், பணிமூப்பு மற்றும் மேற்படிப்பிற்கு 10 விழுக்காடு மதிப்பெண்ணும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் செய்முறைக்கு 10 விழுக்காடு மதிப்பெண்ணும், எழுத்துத் தேர்விற்கு 20 விழுக்காடு மதிப்பெண்ணும் வழங்கி அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

​சா. அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு