தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.இரண்டாவது அலை கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனிடையே கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டன, இந்த நிலையில் சினிமா திரையரங்குகள், மால்கள், பொழுது போக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற வற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வழிபாட்டுத் தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் தடை நீடித்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஓராண்டாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால், அங்குள்ள சிறு வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், மீனவர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வந்த நிலையில், தற்போது அரசின் வழிகாட்டுதலின்படி ஓராண்டுக்கு பிறகு, சில கட்டுப்பாடுகளுடன் இன்று (27ம் தேதி) முதல் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மீண்டும் திறக்க அனுமதி அளித்திருப்பது, சுற்றுலாப்பயணிகளுக்கு அளவில்லா ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளதாவது:
“2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல் பேருந்து நிலையம் மற்றும் ஆலம்பாடி செக்போஸ்ட் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று அல்லது ஆன்லைன் ஆதாரம் காண்பிக்க வேண்டும். அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. பரிசல்களில் சென்று சுற்றிப்பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்படும். பரிசல்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: விஷா