• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர் : அமலாக்கத்துறை..!

Byவிஷா

Nov 28, 2023

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.
கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி ரொக்கம், 1,024 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதற்கிடையே கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அமலாக்கத் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி வருவதாகவும் மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக உள்நோக்கத்துடன் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதில் வாதம் முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்குகளை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் ஆட்சேபனை மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்பாக விசரணைக்கு ஆஜராக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். நீர்வளத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அது தங்களது தவறுதான் என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழியில்லை என்பதால் இந்த தவறை இழைத்து இருப்பதாகவும் அமலாகக்கதுறையின் ஆட்சேபனை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசாரணைக்கு ஆஜரான நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபாதி என்பவர் நிர்பந்தம் செய்து இருக்கிறார். அதை மீறி நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வேன் என ஆஜர் ஆனதாகவும் அவர் உள்பட மற்ற அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களது பெயரை வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழக அரசு மற்றும் மணல் மாஃபியாக்களிடம் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதால் அவர்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை என்று ஆட்சேபனை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து கிடைக்கும் ஆவணங்களை பொறுத்து விளக்கம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.