• Wed. Apr 24th, 2024

ஓ.பி.எஸ். தலைமையில் நடைபெற இருந்த அதிமுக கூட்டம் திடீரென ரத்து

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க இருந்த அதிமுக செயல் வீரர் கூட்டம் திடீரென ரத்தாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்தநிலையில் அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையது கான் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க எதிப்பும் எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த கருத்து எழுந்த பின்னர் நேற்று எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் தனித்தனியே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணியுடனும், ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடனும் ஆலோசனை நடத்தினர். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தேனி பெரியகுளத்தில் நாளை நடைபெற இருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பதாக இருந்தது. சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பிய நிலையில் நாளைய கூட்டம் ரத்தானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *