மேடைக்கு மேடை நம் தாய்மொழியான தமிழைப் பற்றி வீர வசனம் பேசும் நாம் தமிழர் கட்சியில், தமிழ் படிக்கத் தெரியாதவர் ஒருவரை விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27). மருத்துவரான இவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர், நேற்று காலை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது கட்சியினருடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். விருதுநகர் ஆட்சியரிடம் வேட்பாளர் கவுசிக் வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது அவரிடம் உறுதிமொழிப் படிவம் வழங்க அதை வாசிக்குமாறு ஆட்சியர் கூறினார்.
அப்போது, தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்று கூறினார். அதையடுத்து, உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வாசிக்க, அதனை வேட்பாளர் கவுசிக் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா என கட்சியினரிடம் கேட்டபோது, மருத்துவர் கவுசிக்கின் பெற்றோர் வட மாநிலத்தில் வசிக்கின்றனர். கவுசிக் அங்கு படித்ததால் அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. பேச மட்டுமே தெரியும், என்று கூறினர்.