• Thu. May 9th, 2024

ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த 5 வயது சிறுமி

Byவிஷா

Apr 27, 2024

சங்கரன்கோவிலைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் ஸ்கேட்டிங் மூலம் 30 கிலோ மீட்டர் தூரத்தை 1மணி 55 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஸ்கேட்டிங்கில் ஆர்வமுள்ள மாவட்டங்களில் முதன்மையானதாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது. அப்பகுதியில் ஸ்கேட்டிங் விளையாடுவதற்கு ஏற்ற நல்ல மைதானம் இல்லாத போதிலும் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அ.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் – சரண்யா தம்பதியின் மகள் ரேஷ்மிகா(5). இவர், சங்கரன்கோவில் தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) சங்கரன்கோவில் வாசலில் இருந்து கிளம்பி தேவர் குளம் வரை 30 கிலோமீட்டர் தொடர் ஸ்கேட்டிங் சாதனை படைத்து, யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புக்கில் இடம்பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவியின் சாதனை முயற்சி ஓட்டத்தை சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதிர் மற்றும் அய்யாதுரை பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் ஒரு மணி நேரம் 55 விநாடிகளில் 30 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ச்சியாக ஓடி 5 வயது சிறுமி ரேஷ்மிகா சாதனை படைத்தார். இவரது சாதனையை யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக, புதிய சாதனை முயற்சியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரேஷ்மிகாவின் சாதனை முயற்சி முன்னேற்பாடாக சங்கரன்கோவில் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், 30 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வரை தனியார் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியின் சாதனைக்கு இடையூறு இல்லாமல் சங்கரன்கோவில் போலீசார், வாகனங்களை சிறிது நேரத்திற்கு மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தினை சரி செய்தனர். தென்காசி மாவட்டத்தில், கிராமப்புற பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகமாக இருப்பதால், விளையாட்டு மைதானத்தை அமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தலைவன் கோட்டை பகுதியைச் சேர்ந்த 7 வயது மாணவி முவித்ரா 30 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து யூனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *