



சென்னை புரசைவாக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக
ஒருவரை கைது செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் இன்று அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை சென்னை உட்பட சுமார் 15 இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 இடங்களிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்த அல்பாசிக் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் என்றும் கடந்த எட்டு மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருந்து வரும் இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது .
என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அல்பாசிக் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

