


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் 13 பேர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். தப்பிச் செல்ல முயற்சித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் உட்பட நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் செந்தமிழன் காலில் குண்டடிபட்டும், மற்றொருவர் லேசான காயங்களுடனும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காலில் குண்டடிபட்டுள்ள செந்தமிழனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இருவரையும் மேல் சிகிச்சைக்காக இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவித்து தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தி உள்ளோம், முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் என்றும் இதுவரை காரைக்காலைச் சேர்ந்த 15 படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

