ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற போது, அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்ந்தார்.
இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்து அவரை கேரள சிறையில் அடைத்துள்ளனர்.
அப்போது, அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
அதேபோல், கோவை மாவட்டத்தில் புலியகுளம், சுங்கம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் சோதனை நடந்தது.
கோவை புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் பல் மருத்துவர் தினேஷ் . இவர் இடையர்பாளையத்தில் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் டாக்டர் தினேஷ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அவரது வீட்டில் இருந்த மாவோயிஸ்ட் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றினர். பின்னர் டாக்டர் தினேசை கைது செய்து கேரள ஜெயிலில் அடைத்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில் சுங்கம் காமராஜர் வீதியை சேர்ந்த டேனிஷ் என்பவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கேரள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சந்தோஷ் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மாயமானார்.
இவர் காட்டில் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவரது வீட்டிலும் இன்று காலை 6.30 மணி முதல் 7பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.