கோவையில் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கண்ணீர் புகை குண்டு வீசும் புதிய வகை டிரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், கலவரக்காரர்களை ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க ஒத்திகை நிகழ்வானது நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினரே கலவரக்காரர்கள் போல நடித்து கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டங்கள் திடீரென கலவரமாக மாறினால், அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைப்பார்கள்.
இதனிடையே கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தைக் கண்காணிக்கவும், கலவரம் நடக்கும் நேரத்தில் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைக்கவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கான ஒத்திகை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வில், காவல்துறையினர் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது டிரோன் மூலம் அந்த இடத்திற்குச் சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இந்த டிரோன் மூலம் ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடியும். கண்ணீர் புகை குண்டு டிரோனில் தீர்ந்துவிட்டால் அடுத்த இரண்டு நிமிடங்களில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த டிரோனில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும். ஓடிச் செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை அடையாளம் காணவும் முடியும். தமிழகத்தில் காவல் துறையில் டிரோன்கள் பயன்படுத்துவது கோவையில்தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.