வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது, தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து நிலைகொள்ளக்கூடும். அரபிக் கடலில் கோவா அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இரு புறங்களிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் நிலவுவதால், தமிழகத்துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளிலும் 2 நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங் களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தி உள்ளன.