• Sun. Apr 28th, 2024

விருதுநகர் அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மதுரை சரக டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு…..

ByKalamegam Viswanathan

Dec 19, 2023

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் – ஆமத்தூர் அருகேயுள்ள ஓ.முத்துலாபுரம் பகுதியில் உள்ள பெரிய கண்மாய் நிரம்பிய நிலையில், உபரிநீர் ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறியது. அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விருதுநகர் அருகேயுள்ள சேர்வைக்காரன்பட்டி மற்றும் உப்போடை பகுதிகளில் தரைப் பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவலறிந்த மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யாபாரதி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கரண்கரட் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததை அறிந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, வீடுகளுக்குள் சிக்கியிருந்த 165 பேரை மீட்டு, அந்தப் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை காவல்துறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *