விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து (23). கூலி வேலை பார்த்துவரும் இசக்கிமுத்துவிற்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் வழக்கம் போல போதையில் வீட்டிற்கு வந்த இசக்கிமுத்துவை, நிவேதா கண்டித்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே நிவேதா கணவருடன் கோபித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நிவேதாவைத் தேடி அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்ற இசக்கிமுத்து அங்கும் தகராறில் ஈடுபட்டு, மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியுள்ளார். நிவேதா அவருடன் செல்ல மறுக்கவே, ஆத்திரமடைந்த இசக்கிமுத்து அங்கிருந்த அரிவாளை எடுத்து நிவேதாவை வெட்டிவி்ட்டு தப்பியோடி விட்டார். அரிவாள் வெட்டில் காயமடைந்த நிவேதா, இது குறித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.