• Tue. Feb 18th, 2025

நாகப்பட்டினம் அரசுப்பள்ளியின் அவலம்.., தவிக்கும் மாணவ, மாணவிகள்

Byவிஷா

Jun 17, 2022

நாகப்பட்டினம் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டதால் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், விச்சூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இரண்டு ஆசிரியர்கள் கொண்ட இப்பள்ளியில் 1 வகுப்பு முதல் ஐந்தாம் வரை 31 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டதால் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் 5 ஆண்டுகளூக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 2021 ஆம் ஆண்டு பள்ளியின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து மாணவ மாணவிகள் கல்வி பயில கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள சிறிய அளவிலான பரப்பளவு கொண்ட அங்கன்வாடி மையத்தில் குறிப்பிட்ட குழந்தைகளை தற்காலிகமாக அமர வைத்து இருந்தாலும், மீதமுள்ள பெரும்பாலான மாணவ மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். பள்ளி மட்டுமில்லாமல் கிராமமும் அதே கதிதான்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, குடிநீர், கழிவறை என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதியுற்று வருவதாக வேதனை தெரிவித்துள்ள பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கட்டிடமே இல்லாத பள்ளிக்கூடத்திற்கு சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக சுற்றுச்சுவர் எடுத்து இருப்பதுதான் கூடுதல் சிறப்பு. இதனிடையே, பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவித்த பள்ளி ஆசிரியர்கள், விரைந்து புதிய கட்டிடம் கட்டிதர நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி கற்க உதவியாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கட்டிடம் இல்லாத நிலை நீடித்து வருவதால், விச்சூர் அரசு பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், அரசு பள்ளியை விட்டு மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு போகக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. விரைவில், இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைத்து, மரத்தடி கல்வியை மாற்றி கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.