• Thu. Apr 18th, 2024

விஷ்ணு விஷால் நடித்துள்ளஎஃப்ஐஆர் படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு

விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகிவரும் பிப்ரவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் எஃப்.ஐ.ஆர். திரைப்படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளனர்.

படத்தை வெளியிடும் முன் அதை இஸ்லாமிய அமைப்புகளுக்கு காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்” என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள திரைப்படம், எப்.ஐ.ஆர். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

எப்.ஐ.ஆர். (FIR) என்பதின் முழு பொருள் ‘ஃபைசல் இப்ராஹிம் ராஸா’என சொல்லப்படுகிறது. படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது இத்திரைப்படம் முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநரின் கடமை.

ஆகையால் இத்திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு இஸ்லாமிய சமூகத்திற்கு ப்ரீவியூ ஷோ போட்டு காட்ட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் சந்தேகத்தை தீர்க்காமல் படத்தை திரையிட்டு திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தால் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநருக்கு எதிராக சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கடுமையான போராட்டங்களை நடத்துவோம்…” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இத்திரைப்படம் பற்றி விவாதிக்க(6.02.2022) இன்று மதியம் 1 மணிக்கு , சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ஆதம் மார்கெட் வளாகத்தில் உள்ள இந்திய தேசிய லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல் நடைபெற உள்ளது…” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *