• Sat. Jun 3rd, 2023

முந்திரிக்காடு– சினிமா விமர்சனம்

Byதன பாலன்

Apr 10, 2023

‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் சீமான் ‘அன்பரசன்’ என்ற போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புகழ் அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். மற்றும் ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் கலைசேகரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.‘பூமணி’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘பூந்தோட்டம்’, ‘நிலவே முகம் காட்டு’, ‘மிட்டா மிராசு’, ‘கருங்காலி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் மு.களஞ்சியம், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்ற சிறுகதையை அடித்தளமாகக் கொண்டு இந்த ‘முந்திரிக்காடு’ படம் உருவாகியுள்ளது. 2018-ம் ஆண்டே இந்தப் படம் தயாராகி சென்சார் வாங்கியிருந்தாலும், 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.

தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் ‘தட்டாங்காடு’ என்கிற கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம், அந்த சரகத்தில் பணிபுரிந்த காவல் துறை ஆய்வாளரான அன்பரசனை (செந்தமிழன் சீமான்) மன ரீதியாக கடுமையாக பாதிக்கிறது.

அந்த ஊரை சேர்ந்த ஒரு ஆதிக்க சாதி ஆணும், தாழ்த்தப்பட்ட பெண்ணும் காதலிக்கின்றனர். அந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை, உள்ளூர் சாதி வெறியர்கள் ஒன்பது பேர் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர்.
வலுவான சாதிய அரசியல் பின்னணி இருப்பதால் கொலையாளிகளை சட்டம் எதுவும் செய்ய இயலாமல் தலைகவிழ்ந்து நிற்கிறது. ஆனால், சட்டப்படி அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்று ஆய்வாளர் அன்பரசன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும்போது, அடுத்து அதே ஊரில் இன்னொரு காதல் உருவாவது கண்டு அதிர்ச்சியடைகிறார்.

அதே கிராமத்தில் வாழும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முருகன் ஒரு ஏழை முந்திரி விவசாயி. அவரது மூத்த மகள் தெய்வம் என்னும் சுபபிரியா. தன் மகள் தெய்வத்தை எப்படியாவது கலெக்டருக்கு படிக்க வைத்து விடவேண்டும் என்பது முருகனின் கனவு. ஆனால் விதி சும்மா விடுமா..?

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லமுத்துவை, தெய்வம் காதலிக்கிறாள். அந்தக் காதல் மெல்ல, மெல்ல ஊருக்குள் கசிகிறது. தெய்வத்தின் சாதியினர் காதலை ஏற்க மறுக்கின்றனர். அந்த ஒன்பது கொலை வெறியர்களும் அவளையும் அவளது குடும்பத்தையும் துன்புறுத்துகிறார்கள். அந்த கிராமம் ஒன்று திரண்டு தெய்வத்தை பல வழிகளில் அடித்தும், உதைத்தும் திருத்தப் பார்க்கிறது.தெய்வம் திருந்தவில்லை.

இதனால் தெய்வத்தை அவளது குடும்பத்தினரே கொலை செய்துவிட வேண்டும் என்று பஞ்சாயத்தில் முடிவெடுக்கிறார்கள் ஊர்க்காரர்கள். விடிவதற்குள் மகளைக் கொன்று, அவளது பிணத்தை ஊராரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சாதி வெறியர்கள் கட்டளையிடுகிறார்கள். தனது மகளை தானே எப்படி கொல்வது என்று நினைத்து கதறித் துடிக்கிறார் முருகன்.

“எங்களுக்காவா இதை செய்யுறோம்? நாளைக்கு நம்ம சாதிக்கார ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி கட்டிக்கிட்டு ஊருக்குள்ள நடக்கணுமில்ல.. நம்ம சாதி மானம் போவக் கூடாதுன்னுதான் இத செய்ய சொல்லுறோம்..” என்று சொல்லி முருகனை நிர்பந்திக்கிறார்கள்.

மொத்தக் கிராமத்தையும் பகைத்துக் கொள்ள முடியாமல், வேறு வழியில்லாமல், முருகனும் தான் தவமாய் தவமிருந்து பெத்த மகளை கொல்ல ஒத்துக் கொள்கிறார்.

அதே நேரம் ஆய்வாளர் அன்பரசன், அந்த கிராமத்தின் வன்மம், கொலை வெறி, சாதித் திமிர், மனிதர்கள் என்கிற போர்வையில் திரியும் கொடூரர்கள் என எல்லாவற்றையும் தாண்டி, எப்படியாவது தெய்வத்தைக் காப்பாற்றி, செல்லமுத்துவோடு வாழ வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் முருகன் தன் மகளை தானே விஷம் வைத்து கொன்று கிராமத்துக்கு தனது சுய சாதி உணர்வை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த இருவரில் வென்றது யார் என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன் முதல் பாதியில் வரும் அப்பாவித்தனமான இளைஞன் கதாப்பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். நாயகிக்கு உதவி செய்யப் போய் பல முறை சாதி வெறியர்களால் தாக்கப்பட்டும் வன்முறை பாதைக்குப் போகத் தெரியாமல் சமாளிக்கும் சாதாரணமானவராக நடித்துள்ளார். இவரது தோற்றமும், வசன உச்சரிப்பும், நடிப்பும் இந்தக் கேரக்டரை நமக்குள் நிறையவே உள் வாங்க வைத்திருக்கிறது.

அதே நேரம் சப்-இன்ஸ்பெக்டராக ஆனவுடன் ஊருக்குள் வரும்போது காட்டும் கெத்தும், திமிர்ப் பார்வையும், மீசையை முறுக்கிவிட்டு தப்பாட்டம் அடித்துக் கொண்டே செல்லும்போது இவரா அவர் என்றும் கேட்க வைக்கிறார் புகழ். திரைக்கதையினால்தான் இவரது கதாப்பாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை.

இவரது காதலியாக நடித்திருக்கும் சுபபிரியாவுக்கு இது முதல் படமாம். நம்பவே முடியவில்லை. அத்தனை அழுத்தமான நடிப்பினைக் காண்பித்திருக்கிறார். துவக்கத்தில் வேண்டுமென்றே நாயகனை வம்பிழுத்து தன்னுடன் பேச வைத்து அடி வாங்க வைப்பவர்.. தொடர்ந்து பல முறை இதையே செய்யும்போது நமக்கே கடுப்பாகிறது.

ஊர்க்காரர்களிடம் தொடர்ந்து பல முறை அடி, உதை வாங்கி நமது பரிதாபத்தைப் பெறுகிறார். கண்டு கொள்ளாமல் போகும் நாயகனை விரட்டிச் சென்று பிடித்து கேள்வி கேட்கும் தைரியத்திலும், அத்தனை அடித்தும் தன் காதலில் உறுதியாய் இருப்பதாக அவர் சொல்லும்போது காட்டும் வெறியும் நமக்கே வெறியூட்டுகிறது.

சீமான் அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் அன்பரசனாக நடித்துள்ளார். மிக இயல்பான நடிப்பு. லத்தியை தூக்காத ஒரு இன்ஸ்பெக்டரை இந்தப் படத்தில்தான் பார்க்கிறோம். முதல் அடிதடியின்போது நல்லவிதமாக அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கும்விதமும், ஊருக்குள்ளேயே வந்து தீண்டாமை பற்றி அவர்களின் குழந்தைகளை வைத்தே சொல்ல வைப்பதும் சுவையான டிவிஸ்ட்.

இதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியை வைத்து சாதி கட்சித் தலைவரை மிரட்டியனுப்பி ‘சிறப்பு’ என்று சொல்லும்போது தியேட்டரில் கை தட்டல் எழுகிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் பேய் பிடித்த பாட்டியாக நடித்திருந்தவரின் நடிப்பு ரசனையானது. நாயகியின் அப்பாவாக நடித்திருந்த ஜெயராவும் சிறப்பாக நடித்துள்ளார். ஊர்க்காரர்களிடம் சிக்கிக் கொண்ட மகளை மீட்க ஓடி வந்து அவரும் அடிபடும் காட்சியிலும், அடுத்து கம்பு சண்டையிட்டு தனது மகளை மீட்டும் காட்சியிலும் பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மேலும் ஊர்க்கார சாதி வெறியர்களாக நடித்தவர்களும், சாதிக் கட்சித் தலைவராக நடித்தவரும்கூட சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தில் ஒலித்திருக்கும் வசனங்கள் பலவும் கட்சி மேடைகளில் பேசப்படுபவைதான். “நீ அவளை லவ் பண்ணாலும் சாவ.. லவ் பண்ணலைன்னாலும் சாவ..” என்று ஒரு கட்டத்தில் புகழின் நண்பன் சொல்லும் வசனத்திற்கு, தியேட்டரில் பெரும் கை தட்டல் எழுகிறது.

ஜி.ஏ.சிவசுந்தரத்தின் கேமிரா அந்த முந்திரிக் காட்டுப் பகுதிகளையும், கிராமங்களையும் வெக்கையடிக்கும் பகலில் ஊடுறுவி படம் பிடித்திருக்கிறது. சண்டை காட்சிகள் அனைத்தையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள்.

பாடல் வரிகள் நம் காதுகளில் விழும் அளவுக்கு மெல்லிய இசையால் நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன். கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்பு உச்சஸ்தாயியில் இருந்ததால், பின்னணி இசையை வைத்து கூடுதல் மிரட்டலைத்தான் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

படத்தின் துவக்கத்தில் சீமான் இந்தக் கதையை சொல்வதாகக் காட்டிவிட்டு இறுதியில் அவர் எழுதுவதாகவும் காட்டுகிறார்கள். ஆனால் இடையில் இரண்டுக்கும் தொடர்புபடுத்தும் காட்சிகளை வைக்காமல் போனதால், இது நடக்கும் கதையா.. அல்லது சீமான் எழுதும் கற்பனைக் கதையா என்ற குழப்பமும் நமக்கு எழுகிறது.

2 மணி 10 நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய படத்தை இன்னும் நீட்டமாக வளர்த்தெடுத்ததுதான் படத்தின் மிகப் பெரிய குறை.

செந்தமிழன் சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சியில் முக்கியப் புள்ளியாக களமாடிவரும் இயக்குநர் மு.களஞ்சியம் தான் கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகளை மக்கள் முன் வைப்பதற்கு இந்தப் படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இதனால் படத்தில் பல அரசியல்கள் பேசப்படுகின்றன. சாதி அரசியலை எதிர்க்கும் இந்தப் படத்தின் திரைக்கதையில் நடப்பு அரசியல் விவகாரங்களே முன்னிலைப்படுத்தப்பட்டதால், சராசரியான ஒரு திரைப்படத்திற்கான இலக்கணங்கள் இதில் மீறப்பட்டுள்ளது.

காதலர்கள் அடிக்கடி சாதி வெறியர்களால் தாக்கப்படும் காட்சிகள் வந்து கொண்டேயிருப்பதால், ஒரு கட்டத்தில் நம்மளையே “அவங்களை விட்டுத் தொலைங்கடா பாவம்” என்று கதற வைக்கிறது.

அதேபோல் சுபபிரியா வேண்டுமென்றே திரும்பத் திரும்ப புகழை இந்தக் காதல் வலைக்குள் இழுத்துவிடுவதெல்லாம் வம்படியான காதலாகவும், இந்தச் சம்பவங்களுக்கு காதலியும் ஒரு காரணமாகிறாள் என்பதையும் உணர்த்தி நாயகி மீதான பரிதாபவுணர்வை மட்டுப்படுத்துகிறது.

சப்-இன்ஸ்பெக்டராக ஆன பின்பும் புகழ் எதற்காக ஊர்க்காரர்களைப் பார்த்து பயப்பட வேண்டும்..? அவர் தைரியமாக ஊரறிய திருமணம் செய்து கொள்ளலாமே..? இப்படியான திரைக்கதையை எழுதியிருந்தால் படம் இயல்பானவிதத்தில் முடிந்திருக்கும்.

ஆனால், இப்போதோ திரைக்களத்தில் சாதி வெறியர்களை அம்பலப்படுத்தியே தீருவேன் என்கிற இயக்குநர் வைராக்கியத்தில் எழுதப்பட்ட திரைக்கதையில் படம் முடிந்திருக்கிறது.

முந்திரிக்காடு – கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் சுவைக்க வைக்கிறது..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *