• Tue. May 30th, 2023

ரேசர்- திரைப்பட விமர்சனம்

Byதன பாலன்

Apr 10, 2023

ரேசர் படத்தை ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ளார்.

இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார் அகில் சந்தோஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் சதீஷ். பிரபாகர் ஒளிப்பதிவு செய்ய, பரத் இசையமைத்துள்ளார். கனியமுதன் கலை இயக்கம் செய்ய, சண்டை காட்சிகளை சீனு அமைத்துள்ளார்.

பிள்ளைக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க பெற்றோர்கள் நினைக்க.. எப்போதும் உயிர் அபாயம் இருக்கும் விளையாட்டை வாழ்க்கையாக மகன் எடுத்துக் கொள்ள.. என்னவாகிறது என்பதுதான் இந்த ரேசர் படத்தின் கதைக் கரு.

ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வின், சிறு வயதிலிருந்தே பைக் ரேசர் ஆக வேண்டும் என்றே விரும்புகிறார். சைக்கிள், பைக் மீது ஆர்வம் கொண்டு பள்ளிப் பருவத்திலேயே தன் ஆசையை வளர்த்து வைத்திருக்கிறார்.
இவருடைய அப்பாவோ, “இப்போதைக்கு படிப்புதான் முக்கியம்.. அதோடு நீ வீட்டுக்கு ஒரே பையன். அவனுக்கு பிற்காலத்தில் நிம்மதியாக இருக்க ஒரு வீடுதான். அதை நான் கட்டித் தருகிறேன். ஆனால் இந்த பைக் ரேசர் ஆசை மட்டும் வேண்டாம்…” என்கிறார்.

அஸ்வின் படித்து முடித்து வேலைக்குச் சென்று தன்னுடைய சம்பாத்தியத்திலேயே ரேஸ் பைக்கையும் வாங்கி ரேஸ்களில் கலந்து கொள்கிறார். ஒரு போட்டியில் தோற்றுவிடுகிறார். மீண்டும் முயற்சிக்க நினைக்கிறார்.
அப்போது அவர் வாங்கிய கடன்களை கட்ட வேண்டிய நிலைமை வர.. இந்தக் கடனை அடைக்க தெருவில் நடக்கும் ரேஸில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறார்.

அவர் இந்த ரேஸில் ஜெயித்தாரா.. அல்லது தோற்றாரா.. கடனை அடைத்தாரா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.புதுமுகமாக இருந்தாலும் நாயகன் அகில் சந்தோஷ் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இயக்குநர் அளவுக்கதிகமான சென்டிமெண்ட் காட்சிகளை வைக்காததால் அளவுக்கேற்ப நடித்திருக்கிறார் அகில்.

நாயகியிடம் முதல் முறையாகப் பேசும்போது தயக்கத்துடன் தட்டுத் தடுமாறி பேசும்விதத்தில் பாஸ் செய்திருக்கிறார். தனது அப்பாவை எதிர்த்துப் பேச முடியாமல் தவிக்கும் கட்டத்திலும், நண்பர்களின் தூண்டுதலால் பைக் ரேஸில் கலந்து கொள்ள முடிவெடுக்கும்போதும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவரது தந்தை மூர்த்தியாக நடித்திருக்கும் திரௌபதி சுப்ரமணியன் இந்தப் படத்தில்தான் தனது தனித்துவமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மகன் மீதான பாசத்தினால் பைக் ரேஸ் மீது பயம் கொண்டு மகனைத் தடுப்பதும், மகனுக்காக வீடு கட்டிக் கொடுத்து “உனக்காகத் தனி ரூமே கட்டிட்டேண்டா” என்று நெகிழ்ச்சியோடு சொல்லும்போதும், இறுதியில் மகனை முழுமையாகப் புரிந்து கொண்டு மகனது சந்தோஷத்திற்காக, அவனது லட்சியக் கனவிற்கு பச்சைக் கொடி காட்டுவதுமாய்… ஒரு அப்பாவாய் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார் சுப்ரமணியன்.

கதையில் முக்கியத்துவம் இல்லாததால் நாயகியான லாவண்யா சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். மெக்கானிக்காக நடித்திருக்கும் ஆறு பாலாவின் கேரக்டர் சுவாரஸ்யமானது, கதாநாயகனின் அம்மாவான பார்வதி, நண்பர்களான சரத், நிர்மல், சதீஷ், பைக் ரேஸ் பயிற்சியாளர் அனீஸ், வில்லனாக அரவிந்த் என்று பலரையும் சிறப்பாகவே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

பிரபாகரின் ஒளிப்பதிவு சுமார் ரகம். சின்ன பட்ஜெட் என்பதால் அதற்கான அடையாளம் திரையில் தெரிகிறது. என்றாலும். ரேஸ் காட்சிகளை உயிர்ப்புடன் படமாக்கியிருக்கிறார். பரத்தின் இசையில் பாடல்கள் வந்து போகின்றன. பின்னணி இசை நம்மை டிஸ்டர்ப் செய்யவில்லை.
தன்னால் முடியுமா.. முடியாதா.. என்றுகூட யோசிக்காமல் சின்ன வயதில் வரும் கனவை வளர்த்தெடுக்கும் இளைஞன் அதை அடையக் கூடிய வாய்ப்பை எப்போது பெறுவான்.. அந்தக் கனவு நியாயமானதா.. அதைச் செயல்படுத்த முடியுமா.. அவனது பெற்றோர்களின் பயம் சரிதானே.. பெற்றோர்கள் முக்கியமா.. மகனின் லட்சியம் முக்கியமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய இயக்குநர் சில விஷயங்களை அழுத்தமாகச் சொல்லாததால் படம் ரேஸாக பறக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

வீட்டுக்கு ஒரே பையன். ரேஸின்போது மரணம் நடந்துவிட்டால் நாங்கள் என்று செய்வது என்று நாயகனின் அப்பா பயப்படும் காட்சிகளை வைத்திருக்க வேண்டும். அதேபோல் நாயகனும் நாம் இல்லாவிட்டால் அம்மா, அப்பா என்ன ஆவார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்து தயக்கம் கொள்ளும் காட்சிகளும் படத்தில் இருந்திருக்க வேண்டும்.

இவையிரண்டுமே இல்லாமல் வெறுமனே நாயகனின் வாழ்க்கைக் கனவு, அப்பாவின் மறுப்பு, காதல், பைக் ரேஸ் பற்றிய செய்திகள், விதிமுறைகள், பைக்குகள் பற்றிய செய்திகள் ஒரு புறம் சார்ந்த செய்திகளையே படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *