• Thu. Apr 25th, 2024

முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத விளக்கக் பரப்புரை பயணம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வரும் 15 ஆம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை விளக்கி பரப்புரை பயணம் நடந்தது.

கடந்த 7ஆம் தேதி  ஆர்எஸ் மங்கலத்தில் தொடங்கிய பரப்புரைப் பயணம் மூன்றாவது நாளாக ஆண்டிபட்டி வந்தடைந்தது. இங்கு நடந்த கூட்டத்திற்கு வழக்கறிஞர் எம் .கே. எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைப்பின் தலைவர் பி.ஆர் .பாண்டியன் பேசுகையில், ‘காவிரிப் பிரச்சனையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளை ஒன்றிணைக்க வேண்டும். பேராபத்து ஏற்பட்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணை மீட்கவேண்டும். வைகை அணையை தூர்வார வேண்டும், பாலைவனமாக காட்சி அளிக்கும் வயல்வெளிகளில் இருக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும், சாகுபடி பரப்புகளாக மாற்றப்படவேண்டும். நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும். கால்நடை வளர்ப்பில் தடை விதிக்கக்கூடாது . வனவிலங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் . அதே சமயம் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல்வெளிகளுக்கு வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ஆம் தேதி மதுரையில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது .அதை குறித்து மாவட்டம் முழுவதும் பரப்புரை பயணம் மேற்கொண்டிருக்கிறோம்.

ஒருபுறம் கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் மேகதாதுவில் வஞ்சிக்கிறது. முல்லைப் பெரியாறு வலுவிழந்து விட்டது புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். அங்கே காங்கிரஸ் போராட்டத்தை துவக்கி இருக்கிறது. கர்நாடகாவிலும் காங்கிரஸ் போராட்டத்தை துவக்கி இருக்கிறது. அங்குள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாது அணையை கட்டியே தீருவேன், அதற்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள் .

பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்திற்காக சட்டத்தையே  குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கிறது .999 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்ட முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்திருக்கிறது .அதேசமயம் உச்சநீதிமன்றம் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வுக் குழுவை அமைத்து ,அங்கே முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்று மாதந்தோறும், கடந்த ஜனவரி மாதம் வரை அணை வலுவாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பிப்பார்கள். ஆனால் அங்கு எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை.

அதே சமயம் கடந்த பிப்ரவரி மாதம் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்றும், தங்கள் ஆலோசனைகளை ஏற்க ஆய்வுக்குழு தயாராக இல்லை என்று சொல்லி தமிழக பொறியாளர்கள் ஆய்வுக் குழுவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் . எனவே இவற்றையெல்லாம் கண்டித்து வரும் 15ஆம் தேதி நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் பொருளாளர் உதயகுமார், பொதுச்செயலாளர் ஆதிமூலம், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் செந்தில்குமார் ,நாராயணசாமி, பூபாலன், ராமராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *