

தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை குமுளியில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை குமுளி. இங்குள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தில் புலி, காட்டெருமை, யானை, சிறுத்தை, கரடி போன்றவை உள்ளது. இங்குள்ள வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதும், பொதுமக்கள் பீதி அடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குமுளி விஸ்வநாதபுரம் குடியிருப்பு பகுதி சாலையில் பகல் பன்னிரெண்டு மணியளவில் மிகப்பெரிய காட்டு எருமை ஒன்று நுழைந்தது. காட்டெருமை இறங்கிய இடம், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய குடியிருப்பு பகுதியாகும். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சப்பட்டு பீதியில் வீட்டுக்குள் முடங்கி கொண்டனர். அங்கு பல மணி நேரம் சுற்றித் திரிந்த காட்டெருமை பின் வனப்பகுதிக்குள் சென்றது. காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்ற பின்பே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்..,
புலி, சிறுத்தையை தொடர்ந்து, தற்போது காட்டு எருமைகள் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்வெளிகளிலும், சாலைகளிலும் சுற்றித் திரிவது வழக்கமான காட்சியாக உள்ளது. எந்த நேரத்திலும் வன விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். விவசாய நிலங்களுக்குச் செல்லும் மக்களும் உயிர் பயத்திலேயே சென்று வருகின்றனர்.காட்டு எருமைகளை பிடித்து வனப்பகுதிக்குள் தொலைதூரத்தில் கொண்டுவிட வனத்துறையிடம் கோரிக்கை வைத்தால், வனத்துறையினர் தேசிய நெடுஞ்சாலையோரம் காட்டு எருமை படம் வரைந்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர் என்றனர்.

