• Mon. May 6th, 2024

வத்திராயிருப்பு அணைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்.., எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

ByKalamegam Viswanathan

Jul 13, 2023

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு அணைப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி, மான், மிளா, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகள் மேகமலை புலிகள் சரணாலயமாகவும், சாம்பல்நிற அணில்கள் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இதனால் வனப்பகுதிக்குள் செல்பவர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோவிலாறு அணை உள்ளது. இந்த அணைக்கு திருவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வார்கள். மேலும் இந்தப் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. விவசாயப் பணிகளுக்காக அந்தப்பகுதி மக்கள் அணைப் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் தென்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளிலும் யானைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவனமாகவும், எச்சரிக்கையாக இருக்கும்படியும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விவசாய நிலப்பகுதிகளுக்குள் யானைகள் வருவதை தடுத்து, அவை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *