• Sun. May 19th, 2024

திருப்பூரில் கோடை வெயிலை சமாளிக்க ஜில் ஏற்பாடு

Byவிஷா

May 6, 2024

கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில், திருப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தண்ணீரை ஸ்பிரே செய்யும் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருப்பது மக்களிடையே சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் இளநீர், மோர், தர்பூசணி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தேடித் தேடி சாப்பிட்டு தங்களது உடல் சூட்டை தணித்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக அதிகரித்து வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வெயிலின் பிடியில் இருந்து தப்ப பொதுமக்கள் ஏராளமான வழிகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது கத்திரி வெயிலும் துவங்கியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, திருப்பூர் மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் சிக்னலில் செயற்கை முறையில் நிழல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், திருப்பூர் பெரியார் காலணியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் வெப்பத்தை உணராமல் இருப்பதற்காக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்டர் ஸ்ப்ரேயர் மூலம் தண்ணீர் ஸ்ப்ரே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் தொழிலாளர்கள் காலை முதல் மாலை வரை வெப்பத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது.
மேலும் பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் வாட்டர் ஸ்ப்ரேயரில் நிற்பதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்து செல்கின்றனர். இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் நடராஜன் கூறுகையில், “கடந்த பத்து நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. அதனால் மக்களுக்காக வாட்டர் ஸ்ப்ரே அமைத்துள்ளோம். வெயிலில் அலைந்து வரும் மக்கள் சற்று நின்று இளைப்பாறி செல்கின்றனர். அனைவரும் பயனடையும் விதமாக இந்த சிறிய ஏற்பாட்டை செய்துள்ளோம்”, என கூறியுள்ளார்.
இத்தகைய செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதேபோல் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்தால் வெயிலின் தாக்கத்தை எளிமையாக எதிர்கொள்ள முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *