• Sun. May 19th, 2024

ஜார்கண்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்

Byவிஷா

May 6, 2024

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ.25 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே.ராம், பிப்ரவரி 2023-ல் சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள பல இடங்களில் அமலாக்கத் துறை இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமினின் தனிச் செயலர் மற்றும் அவரது வீட்டின் பணியாளர்கள் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமினின் தனிப்பட்ட செயலர் சஞ்சீவ் லாலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அமைச்சர் ஆலம்கிர் ஆலமினின் உதவியாளர் ஜஹாங்கீர் ஆலமின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிடைத்த தகவலின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த 25 கோடி ரூபாய் பணம், அமைச்சரின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலுக்கு சொந்தமானது என்று ஜஹாங்கீர் ஆலம் அமலாக்கத் துறையினரின் விசாரணையின் போது கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *