• Sun. May 19th, 2024

நடிகை கரீனா கபூர் யூனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக நியமனம்

Byவிஷா

May 6, 2024

நடிகை கரீனா கபூர் யூனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யுனிசெப் இந்தியா உடனான கூட்டுறவு 75 -ஆம் ஆண்டு எட்டியுள்ள நிலையில், யுனிசெப் இந்தியா 4 மே, 2024 அன்று இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் கானை குழந்தை உரிமைகளுக்கான தேசிய தூதராக நியமனம் செய்துள்ளது.
இப்பொறுப்பின் வழியாக கரீனா கபூர் கான் ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளான குழந்தைகளின் தொடக்கநிலை முன்னேற்றம், நலம், கல்வி மற்றும் பாலின சமத்துவத்திற்கான யுனிசெப் இந்தியா எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னதாக, 2014 முதல் யுனிசெப் இந்தியாவின் நட்சத்திர பிரதிநிதியாக கரீனா கபூர் கான் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நடிகை கரீனா கபூர் கான் கூறுகையில், “யுனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக இப்போது என் பங்களிப்பை தொடர்வதை பெருமையாக நினைக்கிறேன். பலவீனமான குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக தொடக்கநிலை குழந்தைப் பருவம், கல்வி மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றிற்காக குரல் கொடுக்க என் செல்வாக்கைப் பயன்படுத்துவேன். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு குழந்தைப் பருவம், நியாயமான வாய்ப்பு, எதிர்காலம் ஆகியவை கட்டாயமாகத் தேவை” என்று தெரிவித்தார்.
இதுமட்டும் அல்லாது அதே நிகழ்வில், யுனிசெப் இந்தியா தங்கள் முதல் இளம் பிரதிநிதிகளை நியமித்ததையும் அறிவித்தது. 16 முதல் 24 வயதுடைய இந்த நான்கு பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட ஆர்வமுள்ள பகுதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யுனிசெப் இந்தியாவின் இளம் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரன்ஷி சர்மா – விளையாட்டு உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்சேர்ப்புப் பிரதிநிதி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திக் வர்மா – காலநிலை நடவடிக்கை மற்றும் குழந்தைகள் உரிமை பிரதிநிதி
அசாமைச் சேர்ந்த நாஹித் அஃப்ரின் – மனநலம் மற்றும் குழந்தைப் பருவ வளர்ச்சியின் பிரதிநிதி தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் – ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பிரிவின் பிரதிநிதி இவர்களைத் தவிர்த்து, உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பற்றிய பிரச்சினைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 93க்கும் மேற்பட்ட இளம் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *