சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில் மழை வேண்டி மது குட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மது குடத்தை தலையில் சுமந்து சென்றனர்.

கண்டரமாணிக்கம் தெற்குப்பட்டி அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மழை வேண்டி மதுகுட விழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு மகுடத்தை தலையில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு மதுகுட விழாவில் முதல் மரியாதை பெறுவதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து முதல் மரியாதை இன்றி பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் கோயிலில் மின்விளக்குகள் சிறப்பு அபிஷேகம் ஆடம்பரமின்றி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, எளிய முறையில் நடைபெற்றது. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.