• Sat. Apr 20th, 2024

அமைச்சர் அழைப்பு – கெத்து காட்டிய வீரத்தமிழச்சி!

Byகுமார்

Jan 15, 2022

தான் வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால், விழா குழுவினர் சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தபோதும்கூட அதனை வாங்க மறுத்து கெத்தாக நடைபோட்டு பார்வையாளர்களை அசத்தினார் யோகதர்ஷினி. அமைச்சர் மூர்த்தி அழைத்தபோதும்கூட அதனை நிராகரித்த துணிச்சல், தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி. பள்ளியில் பயில்கிறார். ஜல்லிக்கட்டு தடைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டம்தான் ஜல்லிக்கட்டு காளைகளின் மீது இவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பில் ஈடுபட்டாலும், மிக மிக பின்னால்தான் யோகதர்ஷினிக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை அவிழ்ப்பதை பெருமையாகக் கருதுகிறார். கடந்த முறை இதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளை களமிறங்கியபோது, தனக்கு விழாக் குழுவினர் வழங்க அழைத்தபோது, அதனைப் பெற மறுத்து காளையோடு நடையைக் கட்டினார்.

அப்போது வருவாய்த்துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வழங்குவதற்காக அழைத்தபோதும் அதனை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. அதேபோன்று இந்த முறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையை களமிறக்கினார். அது வீரர்களால் பிடிக்கப்பட்டு பிடிமாடாக ஆனபோதும்கூட, விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்பு வழங்க அழைத்தபோது ‘கெத்து’ காட்டினார்.

இந்த முறை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மைக்கில் யோகதர்ஷினியை அழைத்தபோதும் அதை சட்டை செய்யாமல் தனது காளையை அழைத்துக் கொண்டு நடையைக் கட்டினார். வீரத்தமிழச்சி யோகதர்ஷினியின் இந்த ‘கெத்து’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *