விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்க துப்பில்லாத அதிமுக எந்த முகத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.? என்றார். மேலும் இந்தியாவில் இருக்க கூடிய முதலமைச்சர்களில் முதன்மையான முதலமைச்சர் நம் முதலமைச்சர் என்றார்….
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் சனிக்கிழமை இரவு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்ரூ மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையேற்று பேசியதாவது.
நடக்கக்கூடிய இந்த நல்லாட்சிக்கு அகில இந்தியாவிலேயே ஈடு கொடுக்க கூடிய ஆட்சி கிடையாது.எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அந்த துறையில் முத்திரை பதிக்க கூடிய முதல் முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் ஆருயிர் அண்ணன் தளபதி.
இந்தியாவில் இருக்க கூடிய முதலமைச்சர்களில் முதன்மையான முதலமைச்சர் என்பதை டெல்லிப் பட்டணம் சென்ற போது நாங்கள் உணர்ந்தோம். நேற்று முன்தினம் துபாயில் இருக்கிறார். அபுதாபியில் இருக்கிறார்.டெல்லிப் பட்டணத்தில் இருக்கிறார். சட்டமன்றத்தில் இருக்கிறார்.இன்றைக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கிறார் என்று சொன்னால் சுற்றிச் சுழன்று உங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கக்கூடிய உதயசூரியன் நம்முடைய தலைவர் தளபதி.
அவர் கொடுத்த பட்ஜெட் இனிப்பான பட்ஜெட்.
இன்றைக்கு அதனை எதிர்த்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எதனைச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்?
சொத்து வரியை உயர்த்தி விட்டோம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சொத்து வரியை கூட்டியது இந்த அரசு மனம் உவந்து செய்த செயல் அல்ல என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்து விட்டார். உங்களுக்காக செய்ய வேண்டிய அந்த பணிகளை செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. நீங்கள் 8 ஆண்டுகளாக பட்ஜெட்டே போடவில்லை.
உள்ளாட்சி பணிகளை செய்ய வேண்டும் நிதி வேண்டும். சொத்துவரியை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசாங்கம் சொல்லவில்லை. ஒன்றிய அரசாங்கம் சொல்லி உள்ளது. ஆகவே இதனை ஒரு கசப்பு மருந்தாக தளபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காலை பெட்ரோலுக்கு ஒரு விலை மதியம் டீசலுக்கு ஒரு விலை, அடுத்த நாள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது அதைக் கண்டிக்க துப்பில்லாத அதிமுக எந்த முகத்தோடு ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை சந்தித்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்றைக்கு வரை பதிலில்லை.
இந்தித் திணிப்பு பற்றி அமித்ஷா கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி
அப்படியா?
அமித்ஷா சொன்னாரா?
எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்கிறார்.
அவருக்கு எதுதான் தெரியும்?
இவ்வாறு அவர் பேசினார் இக்கூட்டத்தில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன் நகரகழக செயலாளர் தனபாலன் மற்றும் கவுன்சிலர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்..