

எம்.ஜிஆர் உருவாக்கிய விதியை பின்பற்றி பொதுகுழுவை எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.
சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து எடப்பாடி பக்கம் சென்ற நிலையில், இப்போது அவர் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திரும்பி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்தார். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கும் போதே, மற்ற கட்சிகளைப்போல இல்லாமல் சிறப்பான சட்ட விதிகளை உருவாக்கினார். தொண்டர்கள் தான் தலைமை பொறுப்பைத் தீர்மானிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர். அதற்கு ஏற்ப சட்டவிதிகளை உருவாக்கினார். அப்படித்தான் கட்சியில் உள்ள தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு செய்யப்பட்டது. இதைத் தேர்தல் அதிகாரியே ஏற்றுக்கொண்டார். இந்தச் சூழலில் அ.தி.மு.க.வில் ஏன் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கித் தந்த விதிகளை மாற்றி, பொதுக்குழு என்ற பெயரில் ஒன்றை நடத்தினார்கள். அதை நீங்கள் அனைவரும் டிவியில் பார்த்து இருப்பீர்கள். இரண்டு பொதுக்குழுக் கூட்டத்திலும் என்ன நடந்தது என்பதையும் பார்த்து இருப்பீர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இப்படியொரு கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை. தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்குச் கார எண்ணம் வரக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் இந்த சட்ட விதிகளை உருவாக்கினார். ஆனால், அதையெல்லாம் அவர்கள் மதிக்காமல் நடந்து வருகிறார்கள். தங்களுக்கு தகுந்தாற் போல் விதிகளை திருத்தி இருக்கிறார்கள். இப்போது நடைபெறும் தர்மயுத்தம் அதற்குத்தான். நீதியை நிலைநாட்ட! இந்த யுத்தம் தொடரும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதைத் தர்மமே வெல்லும்’. இவ்வாறு அவர் கூறினார்.

