கேரள சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மெட்ரோமேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி மெட்ரோவின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன். மேலும் ஜெய்ப்பூர், லக்னோ, கொச்சி ஆகிய மெட்ரோ ரெயில் திட்டங்களில் மூத்த பொறியாளராகவும் பணியாற்றியவர். கொங்கன் ரயில் திட்டத்தில் இவரின் பங்கு முக்கியமானது.
பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதரன், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘90 வயதை நெருங்கிவிட்டேன். எனக்கு அரசியலில் ஆர்வம் போய்விட்டது. தேர்தலில் தோல்வி அடைந்தபோது வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது வெற்றி பெற்றிருந்தாலும் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு பெரிதாக எதுவும் செய்திருக்க முடியாது என உணர்கிறேன். அரசியலில் இருந்து விலகினாலும் நான் நடத்தி வரும் மூன்று அறக்கட்டளைகள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்’ என்றார்.