திண்டுக்கல் மாநகராட்சி 02-வது வார்டுக்கு உட்பட்ட பழனி சாலையில் செயல்பட்டு வரும் எண் 3396 கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த மதுபானக் கடைக்கு 100 மீட்டர் சுற்றளவிற்குள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்தா மருத்துவமனை, பிரசவ வார்டுகள், அங்கன்வாடி மையம், மும்மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தும் நியாயவிலைக் கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கர்ப்பிணிகள் மற்றும் பெண்களின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில், மதுபானக் கடையால் அடிக்கடி சச்சரவுகளும் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அருகிலுள்ள லாரிப்பேட்டை செல்லாண்டி அம்மன் கோவில் தெருக்கள் மற்றும் லயன் தெரு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளின் நடைபாதைகளில் அமர்ந்து மது அருந்துவது தொடர்கதையாகி வருவதாகவும், இந்தக் கடையின் காரணமாகக் கடந்த காலத்தில் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடைபெற்று மேற்கு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மே மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், டாஸ்மாக் மேலாளர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரும் இது தொடர்பாக மனு அளித்திருந்த நிலையில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் மீண்டும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அரசு நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, மாமன்ற உறுப்பினர் கே. மாரியம்மாள் தலைமையிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் முன்னிலையிலும் ஊர்வலமாக நடந்து வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர், டாஸ்மார்க் நிர்வாகம், மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்தப் போராட்டத்தின் காரணமாக திண்டுக்கல் பழனி சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து டாஸ்மார்க் கடை அகற்றுவது தொடர்பாக உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.


