• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு..,

BySeenu

Nov 27, 2026

கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக கார்த்தி மற்றும் மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் 68 அரசுத் தரப்பு சாட்சிகள், 221 ஆவணச் சான்றுகள் மற்றும் 10 சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், முதல் குற்றவாளியான கார்த்தி மீது சுமத்தப்பட்டிருந்த கொலை, கடத்தல், கூட்டுச் சதி, தடயங்களை மறைத்தல் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு எதிரான தீவிர பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

அதேபோல், இரண்டாவது குற்றவாளியான மோகன் மீதான கூட்டுச் சதி, குற்றத்திற்குத் தூண்டுதல், தடயங்களை மறைத்தல், விசாரணையைத் திசைதிருப்ப முயன்றது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனிடையே, இருவருக்குமான தண்டனை விவரங்கள் குறித்து இரு தரப்பு வாதங்களைக் கேட்பதற்காக வழக்கு வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும், குற்றவாளிகளின் குடும்பப் பின்னணி மற்றும் சிறை நடத்தை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர், காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் குறுகிய காலத்தில் இந்தத் தீர்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமா என்பது வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தெரியவரும்.டிசம்பர் 4-ல் தண்டனை விவரம் அறிவிப்பு – சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடுத்தகட்டத் தீர்ப்பை எதிர்பார்த்து பொதுமக்கள்.