• Thu. Apr 25th, 2024

டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டம்

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. வழக்கமாக நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து வந்த இக்கூட்டம், முதல் முறையாக வேறு இடத்தில் நடந்தது.

கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஸ் கோயல் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.12 எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: “பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். சபை நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சொல்வதை போல், ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டி இருப்பது நல்லதல்ல. உங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்.எம்.பி.க்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான போட்டிகள், சூரிய நமஸ்கார போட்டிகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். பத்ம விருதுகள் பெற்றவர்களை கவுரப்படுத்துங்கள்.

வருகிற 14-ந் தேதி, எனது வாரணாசி தொகுதியின் மாவட்ட பா.ஜனதா தலைவரையும், கோட்ட பா.ஜனதா தலைவரையும் தேநீர் விருந்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தப்போகிறேன்.”இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது, “நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு பா.ஜனதா எம்.பி.க்கள் அவரவர் தொகுதிகளுக்கு செல்ல வேண்டும். மாவட்ட, கோட்ட பா.ஜனதா தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.இந்த தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்த நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, ‘‘இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க் களும் இன்று மன்னிப்பு கேட்டால் கூட இடைநீக்கத்தை ரத்து செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *