விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீரோட்டங்களையும் குளங்களையும் மற்றும் குட்டைகளையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் நீர் நிலை புறம்போக்கு மற்றும் நீர்வழி புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யம் பாராமல் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் ஆலோசனையின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்காக வருவாய்துறையில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளன. சிவகாசி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. ஆனையூர் ஊராட்சியில் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் 222 மீட்டர் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டன. தாசில்தார் லோகநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் சர்வேயர் பிரிவு, போலீசார் உதவியுடன் எல்லை கற்கள் நடப்பட்டன. அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் எல்லை கற்கள் நடும் பகுதியில் தங்களது நிலம் இருப்பதாகவும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறி எல்லை கற்கள் நடுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உரிய ஆவணங்கள் கொடுக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.