• Sat. Oct 12th, 2024

பெரியாரை பின்பற்றினால் திருமணத்தை எளிமையாக நடத்தலாம்… கி.வீரமணி பேச்சு

Byகாயத்ரி

Apr 20, 2022

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நீட்தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்டு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் திராவிடகழக தலைவரான கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளார். இதற்கு முன்னதாகவே பொதுக்கூட்ட மேடையில் சுயமரியாதை திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டம் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கியது. அப்போது மேடையில் மணமக்கள் ரா.நேரு- செ.பொ.அறிவுச்செல்வி போன்றோர் வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வீரமணி உறுதிமொழி வாசித்து திருமணம் ஒப்பந்தத்தை செய்து வைத்தார். உறுதி மொழியை திரும்ப சொல்லி மணமக்கள் பூமாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட மணப்பெண் செ.பொ.அறிவுச்செல்வி காவல்துறையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் பொன்முகிலன்- செல்வி போன்றோர் திராவிடர் கழக தீவிர பற்றாளர்கள் ஆவர். கடந்த 30 வருடங்களுக்கு முன் இவர்களின் திருமணத்தை வீரமணி நடத்தி வைத்துள்ளார். இதையடுத்து அவர்களின் மகளான அறிவுச்செல்விக்கு பெயர் சூட்டியதும் அவர்தான். தற்போது அவரே திருமணமும் செய்து வைத்துள்ளார். அதன்பின் வீரமணி பேசியதாவது “தந்தை பெரியார் திருமணத்தை மிக எளிமையாக நடத்த வேண்டும் என கூறுவார். அந்த வகையில் மிக மிக எளிமையாக இந்த திருமணம் நடந்துள்ளது. ஏனெனில் மணமக்களின் பெற்றோர்கள் பந்தல் போடவில்லை, யாரையும் அழைக்கவும் இல்லை. எனினும் தந்தை பெரியாரை வழிமுறையை கடைபிடித்து நடந்ததால், தலைவர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக இத்திருமணம் நடந்துள்ளது. ஆகவே பெரியாரை பின்பற்றினால் திருமணத்தையும் எளிமையாக நடத்தலாம், வீட்டையும் எளிமையாக கட்டலாம்’ என்று பேசினார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *