• Tue. May 7th, 2024

அரசு பள்ளியில் பிரிவு உபச்சார விழா

ByP.Thangapandi

Apr 26, 2024

உசிலம்பட்டி அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு துவக்கப்பள்ளியில் கல்வியை பயிற்றுவித்த தலைமையாசிரியருக்கு, அவர் ஓய்வின் போது தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்களை வழங்கி பிரியாவிடை கொடுத்து அனுப்பிய கிராம மக்களின் பிரிவு உபச்சார விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தவர் வடுகபட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த துவக்கப்பள்ளிக்கு வந்த நாள் முதல் பல்வேறு வகையிலும் மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தையும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து அவர்களின் தனித்திறமைகளையும் உருவாக்கிய இந்த தலைமையாசிரியர், மாணவ மாணவிகள் ஐந்தாம் வகுப்பை கடந்து சென்றாலும் அவர்களின் கல்வி திறன், அவர்களின் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவியதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்கள், அரசு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இங்கு ஐந்தாம் வகுப்பு வரை பயின்றுவிட்டு செல்லும் மாணவ மாணவிகள் மேல்படிப்பிற்காக வைக்கும் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவதால் எந்த தடையுமின்றி மாணவ மாணவிகளை மேல்படிப்பிற்காக சேர்த்துக் கொள்ளும் அளவு அறிவு திறனை வளர்ப்பதில் வல்லமை கொண்ட ஆசிரியராக திகழ்ந்ததாக கூறப்படுகிறது.,

மாணவ மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொதுமக்களின் அன்பையும் பெற்று பள்ளிக் கட்டிட வளர்ச்சி, பள்ளிக்கான உபகரணங்களின் வளர்ச்சிகள் என பலவற்றையும் பெற்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இந்த தலைமையாசிரியர் செல்வ சிரோன்மணி இன்று முதல் பணி நிறைவு செய்வதை அறிந்த கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மாலை, கிரீடம் அணிவித்தும், தாய்வீட்டு சீதனமாக சீர் செய்வதை போன்று அண்டா, பித்தளைப்பானை என பல்வேறு பரிசுகளை கிராமத்தின் சார்பாக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.

தொடர்ந்து மேள தாளத்துடன் கிராமத்தில் உள்ள முக்கிய திருத்தலங்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து, அவரது நினைவாக மரக்கன்றுகளையும் நட வைத்து தலைமையாசிரியருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *