• Tue. May 7th, 2024

மாடு திருடர்கள் கைது

ByNamakkal Anjaneyar

Apr 26, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிராமப்பகுதிகளில் கால்நடைகள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக, திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று ஊரக போலீசார் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில், காவலர்கள் ரமேஷ், சரவணன், கோபால் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி ஆட்டோவை சோதனைக்காக நிறுத்திய போது, அதிலிருந்த ஓட்டுநர் இறங்கி தப்பி ஓட முயற்சிக்கவே, அவரைப்பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, அவர் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை சேர்ந்த கவினேஷ் என்பதும், அவரது நண்பர்கள் பழனிச்சாமி மற்றும் காந்தி மூவரும் சேர்ந்து கிராமப்புறங்களில் மாட்டு எரு வாங்குபவர்கள் போல் சென்று, கிராமங்களை நோட்டமிட்டு, பிறகு இரவு நேரங்களில், கட்டுத்தரைகளில் கட்டிவைக்கப்பட்டிருந்த, மாடுகளை கவினேஷ் உடைய மினி ஆட்டோவில் ஏற்றி சென்று கேரள மாநிலத்தைச் சார்ந்த அடிமாட்டு தரகர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. நேற்றிரவு கூட திம்மராவுத்தம்பட்டி பகுதியில் ஜெயமணி என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகளை பிடித்து அடிமாட்டிற்கு விற்றுவிட்டு வந்ததாகவும், அந்த பணத்தை வைத்து கவினேஷ் மினி ஆட்டோவினுடைய கடனை அடைத்ததாகவும், தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு ஊரக காவல் ஆய்வாளர் தீபா உத்தரவின் பேரில், துணை ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்ததுடன், மாடு கடத்தலுக்கு பயன்படுத்திய மினி ஆட்டோவையும் பறிமுதல் செய்து, மூவரையும் திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதியிடம் ஆஜர் படுத்தி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டதை அடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *