நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பாலகொலா ஊராட்சியில் நடந்த துணை தலைவர் தேர்தலில் படுக தேச பார்டி கட்சியின் நிறுவனரும், தலைவருமான மஞ்சை.வி.மோகன் வெற்றிபெற்றார்.
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் வரை காலியாய் இருந்த ஊராட்சிகளின் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தல் இன்று
19-12-2022 அன்று மாநிலம் முழுவதும் நடைப்பெற்றது.
இதன் ஒருப்பகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகொலா ஊராட்சியில் காலியாய் இருந்த துணைத்தலைவருக்கான தேர்தல் நடைப்பெற்றது. 15 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பாலகொலா ஊராட்சி தலைவர் உட்பட 16 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்று இருந்தார்கள்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய தேர்தலில் மஞ்சை வி.மோகன்
15-வார்டு உறுப்பினரும், தங்காடு-ஓரநள்ளி 9-வது வார்டு உறுப்பினருமான நாகராஜனும் போட்டியிட்டனர். தேர்தலில் இருவரும் தலா 8 ஒட்டுகள் சம அளவில் பெற்றனர். தொடர்ந்து இருவரின் பெயர் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க, தேர்தல் அலுவலர் முடிவு செய்ததை தொடர்ந்து அச்சீட்டுகளை இரண்டு வயது குழந்தை எடுத்தது.
அதில் மஞ்சக்கொம்பை 15- ஆவது வார்டு உறுப்பினர் மஞ்சை.வி.மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரும் உதகை ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருமான விஜியா வழங்கினார்.பதவி ஏற்பு விழா விரைவில் நடைப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.