• Tue. Apr 30th, 2024

திமுகவுக்கு புதிய பெயர் சூட்டிய நிர்மலாசீதாராமன்

Byவிஷா

Apr 13, 2024

நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன், திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் ‘டிரக்ஸ் முன்னேற்றக் கழகம்’ எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய பெயரை சூட்டி உள்ளார்.
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டிருந்தார். மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் மத்திய அரசின் மூலம் பயன்பெற்ற பெண்கள் உடன் கலந்துரையாடிய பின் பேசிய அவர், மத்திய அரசு அமல் படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
தொடர்ந்து, காய்கறி விற்கும், சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு மானியத்தோடு வட்டி விகிதம் குறைத்து கடன் கிடைக்கிறது. மாநில அரசு பெண்களை எப்படி நடத்துகிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என சொல்லி பின்னர் தகுதி உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என நாடகம் நடிக்கின்றனர். மோடி அது போன்ற அரசியலை செய்ய மாட்டார். திமுகவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். பெண்களை அவமதிக்கும் செயலை மோடி செய்யமாட்டார்.
சென்னையில் மேயர் எவ்வளவு சிரமப்படுகிறார் என பார்க்க முடிகிறது. அவரின் புடவையை இழுப்பது என அவர் கட்சி காரர்களே அந்த அராஜகமான செயலில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளாவது அப்படி செய்யகூடாது என கண்டித்ததுண்டா? தங்களுடைய சுயநலத்திற்காக மதுவை விற்போம், போதைபொருள் விற்போம், சினிமா தயாரிப்போம் என குடும்ப நலனை நினைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
டிரக்ஸ் முன்னேற்ற கழகத்தை விரட்டுவோம் என ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி தொகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து எல். முருகனை வெற்றி பெறச் செய்து உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *