இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்துக்குள் உச்சகட்டத்தை எட்டியுள்ள அதிகார மோதலால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சே, தாம் அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இலங்கை அதிபராக கோத்தபாய ராஜபக்சே, அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் உள்ளனர். ராஜபக்சே குடும்பத்தில் பலரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்னரே மகிந்தவின் அரசியல் ஓய்வு குறித்து இலங்கை அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் 2020-ம் ஆண்டு அடுத்த 2 ஆண்டுகளில் தாம் அரசியலைவிட்டு விலகுவேன் என ராஜபக்சே கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்போது மகிந்த ராஜபக்சே இதனை மறுத்திருந்தார்.
இந்நிலையில் அண்மை காலமாக மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதிகளில் அவரது குடும்பத்தினரே ஈடுபட்டு வருவதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்தே மகிந்த ராஜபக்சே திடீரென இந்தியாவுக்கு வருகை தந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறப்பட்டது. தற்போது மகிந்த ராஜபக்சே திடீரென அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறப் போவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. மகிந்த ராஜபக்சேவுக்கு பதில் பசில் ராஜபக்சே, சமல் ராஜபக்சே மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோரில் ஒருவர் பிரதமராக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொழும்பு வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, மகிந்த ராஜபக்சேவுக்கு மருத்துவ ரீதியாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் அவருக்கு பதிலாக மாற்று பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பசில் ராஜபக்சே இரட்டை குடியுரிமை பெற்றவராக இருக்கிறார். அவருக்கு எதிர்ப்பு எழாதவரை அவருக்குதான் மாற்று பிரதமர் பதவிக்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனிடையே தாம் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியான செய்திகளை மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகிந்த ராஜபக்சே இதனைத் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.