மதுரை விமான நிலையத்திற்கு இணையாக அதிநவீன வசதிகளுடன் மதுரை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், வருடாந்திர ஆய்வாக மதுரை ரயில்வே கோட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார். முதலாவதாக மதுரை ரயில் நிலைய நவீன சிக்னல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
பின்பு முதலாவது நடைமேடையில் உள்ள பயணிகள் வசதிகள் மற்றும் நடை மேம்பாலம், மதுரை ரயில் நிலைய புதிய கட்டிட பணித்திட்டங்களை சிறப்பு வீடியோ திரை மூலம் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மதுரை ரயில் நிலையம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் புதுப்பிக்கப்பட உள்ள இந்த ரயில் நிலையம், இரண்டடுக்கு கட்டிடமாக உயர இருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் நிலையமாக மாற்றப்பட இருக்கிறது.இதற்காக டெண்டர் டிசம்பர் இறுதியில் வெளியிட உள்ளது. டெண்டர் விடப்பட்டு 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுப்பணியையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் முடிந்த பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு இணையாக, மதுரை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டு விடும். பாம்பன் பாலம் பணிகள் விரைவில் முடிவடையும். கொரோனா தொற்றுக்கு முன்பு இயங்கிய பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும்’’ என்றார்.
ரயில் இயக்கம், வர்த்தகம், சிக்னல், மருத்துவமனை மின்மயமாக்கல் பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறந்த பணியினை பாராட்டி குழு விருது வழங்கி கவுரவித்தார். ஆய்வின்போது பொதுமேலாளருடன் முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை ரயில் இயக்க மேலாளர் குமார், முதன்மை பொறியாளர் பிரபுல்ல வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.