ஜப்பான் பிரதமர் இல்லத்தில் பேய் இருப்பதாக கட்டுக்கதைகள் பல ஆண்டுகளாக உலாவி வருகிறது. இதனால் சில பிரதமர்கள் அந்த அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.
இந்த பேய் கதை உருவாகக் காரணம், 1963-ல் ஆட்சி கவிழ்ப்பின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் புகுந்த ராணுவ வீரர்கள் அமைச்சர் உள்பட மூத்த அரசு அதிகாரிகள் பலரை சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர் தான் இந்த இல்லத்தில் பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தன.

அந்த வகையில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடோவிடம் பலரும் இந்த இல்லத்தில் தங்குவதை தவிர்க்கும்படி கூறினர். ஆனால் அதையும் மீறி புமியோ கிஷிடோ நேற்றுமுன்தினம் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு குடி பெயர்ந்தார். அங்கு முதல் நாளை எப்படி கழித்தார் என்பது குறித்து நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் “நேற்று, இரவு நான் நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை” என கிண்டலாக கூறினார்.