மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ளது மதுரை மலர் சந்தை. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து உற்பத்தி ஆகின்ற மலர்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக மதுரை மல்லிகை மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை வரத்து மற்றும் உற்பத்திக் குறைவின் காரணமாக ரூபாய் நான்காயிரம் வரை விற்பனையானது. பிறகு படிப்படியாக குறைந்து ஓரளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பிச்சி ரூ.1300, முல்லை ரூ.1300, தாமரை ஒன்று ரூ.15, பட்டன் ரோஸ் ரூ.250, செவ்வந்தி ரூ.150, சென்டு மல்லி ரூ.100, அரளி ரூ.350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, சிறு பூ வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், இந்த ஆண்டின் கடைசி நாளில் மதுரை மல்லிகை விலை ரூபாய் 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இனி அடுத்து வருகின்ற முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் காரணமாக பூக்களின் விலையில் ஏற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.