மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக திமுக பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 16ம் தேதி முடிவடைந்து, அதற்கான தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது. இதில் பெரும்பாலன இடங்களை திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக திருமங்கலம் நகர பொறுப்பாளர் சி.முருகன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மதுரை தெற்கு மாவட்டம், திருமங்கலம் நகர பொறுப்பாளர் சி.முருகன், உசிலம்பட்டி நகரச் செயலாளர் தங்கமலைப்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் சுதந்திரம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சோலை ரவிக்குமார், உசிலம்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரன் ஆகியோர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கமாக நீக்கப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், எஸ்.எம்.ஷபீர் அகமத் ஆகியோரும் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்து அவர்கள் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும், தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு போட்டியாக வேட்பாளர்களை நிறுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டுள்ளது.