• Fri. Apr 26th, 2024

கடலூர் திமுக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

கடலூர் திமுக எம்எல்ஏ கோ. அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பிப். 19ஆம் தேதி சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்தத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தன.

இதையடுத்து கடந்த வாரம் மேயர், நகராட்சி தலைவர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் மேயர், நகராட்சி தலைவர் பதவியிடங்களை கட்சித் தலைமை ஒதுக்கியது. இருப்பினும், பல இடங்களில் கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கி பதவிகளைக் கைப்பற்றியதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக பல்வேறு கூட்டணி கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உடனடியாக பதவி விலகிவிட்டு தன்னை சந்திக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து சில இடங்களில் திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜிமானா செய்தனர்.

இருப்பினும், பல இடங்களில் திமுகவினர் ராஜினாமா செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி தான் கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவுக்கும் துணைத் தலைவர் பதவி திமுகவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நகராட்சி தலைவர் பதவியையும் திமுகவினரே கைப்பற்றினர். திமுகவின் ஜெயந்தி என்பவர் நெல்லிக்குப்பம் தலைவரானார். இதனால் மறைமுக தேர்தல் நடைபெற்ற நாளன்றே நெல்லிக்குப்பம் நகராட்சி முன்பு இது தொடர்பாக விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், முதல்வரின் உத்தரவுக்குப் பின்னரும் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியில் இருந்து ஜெயந்தி ராஜினாமா செய்யவில்லை. இது தொடர்பாகத் தலைமை நடத்திய விசாரணையில் கடலூர் எம்எல்ஏ அய்யப்பனுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கோ அய்யப்பன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம் தான் என்றாலும், எம்எல்ஏ பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை உத்தரவைப் பின்பற்றத் தவறுவோருக்கு இது கடைசி எச்சரிக்கை என்றும் இதன் பின்னரும் ராஜினாமா செய்யவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *