• Fri. Apr 19th, 2024

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் – மு.க. ஸ்டாலின் பேச்சு

ByA.Tamilselvan

Sep 3, 2022

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன.
தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது…
ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு மாநிலங்களுக்கு நிதிசுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகைக்கான கால அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். வெள்ள பாதிப்பு உள்ளிட்ட மாநில அரசுகளின் தேவைகளுக்கான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சீர்திருத்த சட்டத்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.
தென்மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *