• Sun. Apr 28th, 2024

தன்னை வணங்குகிறவர்களுக்கு 16 பேறும் தருகிறவன் முருகப்பெருமான்.., எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு..!

ByKalamegam Viswanathan

Nov 23, 2023

தன்னை வணங்குகிறவர்களுக்கு பதினாறு பேறும் தருகிறவன் முருகப்பெருமான் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் திருக்கார்த்திகை வைபவத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தின். அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.
இதில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் குருவாய் அருள்வாய் குகனே என்ற தலைப்பில் பேசியதாவது..,
வியாசர் ரிக் வேதம், யஜுர், சாம, அதர்வண வேதம் என நான்கு வேதங்களை படைத்து நான்கு திசைகளுக்கு நான்கு பேரை அனுப்பி அதை பரப்ப சொன்னார். அதனாலேயே அவரை வேதநாயகன் என்கிறோம். வேதம் என்பது வெறும் சப்தம் அல்ல. அது இறைவனின் மூச்சுக்காற்று. வியாசர் நமக்கு அளித்த 18 புராணங்களில் கந்தபுராணம் மிகச் சிறப்பானது. ராமாயணத்தில் ராமன் லட்சுமணன் ஆகியோருக்கு வீரம் குறித்து உபதேசிக்கும்போது விசுவாமித்திரர் கூறியது கந்தபுராணத்தைதான்.
முருகனுக்குள் சிவம், வைணவம், சாக்தம், பிரம்மம் என சகலமும் அடக்கம். மும்மூர்த்திகளும் வரங்களுக்கு கட்டுப்பட்டு தங்கள் சக்தியை பயன்படுத்த இயலாத நிலையில் அந்த மூவரின் சக்தியாக உருவாகியவன் கந்தன் ஆகிய முருகப்பெருமான். தமிழர்களின் பண்பாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை சிறப்பானது. இவற்றில் குறிஞ்சிக்கு கடவுளாக தமிழ் கடவுள் ஆக வணங்கப்பட்டவன் முருகன். அதனாலேயே காஞ்சியில் உள்ள கச்சியப்ப சிவாச்சாரியாரின் கனவிலே தோன்றி கந்தபுராணத்தை தமிழில் எழுதும் படி முருகப்பெருமான் பணித்தார். கச்சியப்ப சிவாச்சாரியாரும் கந்தபுராணத்தை தமிழில் படைத்தார். முருகன் என்றால் அழகு. முருகன் என்றால் வீரம் முருகன் என்றால் நுண்ணறிவு. முருகன் 27 நட்சத்திரங்களில் பதினாறாவது நட்சத்திரமாக விசாகத்தில் அவதரித்தான். தன்னை வணங்குகிறவர்களுக்கு 16 பேரும் தருகிறவன் முருகப்பெருமான். அதனாலேயே முருகன் பதினாறில் உதித்தான். முருக வழிபாடு 16 பேறுகளான நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், குன்றாத வீரம், குழந்தை பாக்கியம், செல்வம், நல்ல மதி, தான்யம், சௌபாக்யம், போகம்,அறிவு, அழகு, பெருமை, அறம், குணம், நோய் நொடி இல்லாத வாழ்க்கை, என பதினாறும் நமக்கு அளிக்கும்..
முருகனை திருச்செந்தூரில் ஆதிசங்கரர் சுப்ரமணிய புஜங்கம் பாடி தனது ரோகத்தை நீக்கிக் கொண்டார். புஜங்க பாராயணம் ஒரு மாமருந்து.. சஷ்டி கவசமும் உற்ற துணையாக இருக்கும். ஒரு முறை ஸ்ரீ மஹா பெரியவரிடம் சோகத்தோடு ஒருவர் எனக்கு பணக்கஷ்டம் என்ற போது அப்போது பெரியவர் அருணகிரிநாதர் பாடிய குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்ற பாடலை தினமும் கூறு என்றார் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை தினமும் ஜெபித்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். உலகில் பிரம்மஞானிகள் கேட்டது கிடைக்கும். நினைப்பது நடக்கும். கோவில்களில் உழவாரப் பணிக்காக தன்னையே அர்ப்பணித்தவர் அப்பர் பெருமான். பிறருக்கு உதவி செய்வதே பூஜை என்றார். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.
இன்று (வியாழன்) மாலை 5.30 மணிக்கு குரு வாரத்தை முன்னிட்டு எஸ் எஸ் காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *