• Fri. Apr 26th, 2024

இலக்கியம்

Byவிஷா

Mar 4, 2023

நற்றிணைப் பாடல் 128:

பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி
அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக அதற்கொண்டு
அதே நினைந்த நெஞ்சமொடு
இது ஆகின்று யான் உற்ற நோயே

பாடியவர்: நற்சேந்தனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

பகலில் எரியும் விளக்கு சுடர் மங்கிக் காணப்படுவது போல உன் மேனி ஒளி இழந்து காணப்படுகிறது.  பாம்பின் நிழல் ஊர்வதால் ஒளி மங்கும் நிலாவைப் போல நெற்றி ஒளி மறைந்திருக்கிறது. இவற்றை நீ எனக்குச் சொல்லவில்லை. மறைக்கிறாய். உனக்கு நான் உயிர் போன்ற பண்புடையவள் ஆதலால் இவற்றைக் கண்டுகொண்டேன். இவ்வாறு சொல்லிக்கொண்டு, ஆயிழை! (நுட்பமான அணிகலன் பூண்டிருக்கும் தோழியே) நீ அழுகின்றாய். அழாதே (அழுதல் ஆன்றிசின்). கதிர் தழைத்த தினைப் புனத்தைக் காத்துக்கொண்டிருந்தபோது ஒருவன் வந்தான். தலையில் கண்ணி (பூங்கொத்து), காலில் கழல், மார்பில் மாலை அணிந்திருந்தான். 

குளுமை தோன்றும்படி என் முதுகுப்புறமாகத் தழுவினான். அதுமுதல் அதே நினைவுதான் வருகிறது. அதுதான் எனக்கு வந்திருக்கும் நோய். அது நெஞ்சநோய். வேறொன்றும் இல்லை. அழாதே. – இவ்வாறு தலைவி தோழியிடம் அறத்தொடு நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *